September 21, 2017
tamilsamayam.com
ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகள போட்டியில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரா் லட்சுமணனும், பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சித்ராவும் தங்கப்பதக்கம் வென்றனா்.
5-வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 02.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 03.98 வினாடி), ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் (8 நிமிடம் 07.09 வினாடி) பெற்றனர்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா 4 நிமிடம் 27.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.