September 23, 2017 தண்டோரா குழு
பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் சீரான முறையில் வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,
“கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மூலம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளுக்கும்,1200 குக்கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர் தேவைகளுக்கேற்ப பவானி, ஆழியார், சிறுவாணி, வடவள்ளி-கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் பில்லூர் உள்ளிட்ட கூட்டுகுடிநீர் திட்டங்களை செயல்படுத்தி கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ததால் தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. கோவை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் சிறுவாணி அணை, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகள் நிரம்பியுள்ளதன.
கோவை மாவட்டத்தில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 369 மில்லி மிட்டர் மழைபொழிவு எதிர்பார்க்கப்பட்டதில் 394 ஆளவு பெய்துள்ளது. 6.76(மி.மி) கூடுதலாக மழைப்பொழிவு உள்ளது.
இன்னும் சிறுவாணி அணை முழுமையாக நிரம்ப 6 அடி மட்டுமே உள்ளது. தற்போது சிறுவாணி அணையிலிருந்து 40 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தொடர்ந்து மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாலும், 40 மில்லியன் லிட்டரிலிருந்து 80மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவாணி குடிநீர் இணைப்பு பகுதிகளுக்கு, பில்லூர் அணையிலிருந்து வழங்கப்பட்டு வந்த 25 மில்லியன் லிட்டர் நிறுத்தப்பட்டு, முழுமையாக சிறுவாணி குடிநீர் வழங்கப்படும்.
குறிச்சி,குனியமுத்தூர் பகுதிகளுக்கு ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து 9 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 11 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்த்தின் ஊரக பகுதிகளில் உள்ள 777குளங்கள்மற்றும் குட்டைகளும் தற்போது பெய்துள்ள மழையால் ஒரளவு நிரம்பியுள்ளது அந்தந்த பகுதிகளில் நீர் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்திட உதவியுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.