June 11, 2016
தண்டோரா குழு
கொன்னொர் ஜோன்சன் எனும் 6 வயதுச் சிறுவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவைக் காப்பாற்ற மேற்கொண்டு வரும் முயற்சி சமீபத்தில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்று அனைவரையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அரசு பொருளாதார நெருக்கடியால் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் சில முக்கிய வருங்காலத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை ரத்து செய்தது. இதனால் பல்வேறு ஆராய்ச்சிகள் தடைப்படும் என்பதுதான் தற்போது அமேரிக்கா முழுவதும் உள்ள பேச்சு.
இந்நிலையில் தனது 3வது வயதில் இருந்து விண்வெளி வீரராகவேண்டும் என நினைத்துவந்த சிறுவன் ஜோன்சன் இதைக் கேள்விப்பட்டவுடன், இது வருங்காலத்தில் தான் ஒரு விஞ்ஞானியாக அல்லது விண்வெளி வீரனாக வரும் கனவையும் பாதிக்கக் கூடியது என்ற கோணத்தில் நினைத்துள்ளான். பின்னர் அவன் பெற்றோரின் உதவியுடன் மேற்கொண்ட முயற்சி தான் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது பற்றி கூறிய அச்சிறுவன், தான் இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதி அனுப்புவது தான் எனவும். அதோடு, தன்னுடைய வங்கி சேமிப்பான 10.41 டாலர் பணத்தையும் அவருக்கு அனுப்புவது எனவும் நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த என் பெற்றோர் வெள்ளை மாளிகைக்கு இது குறித்த ஒரு கடிதத்தை சுமார் ஒருலட்சம் கையெழுத்துடன் அனுப்பு என ஊக்கப்படுத்தினர்.
இதையடுத்து இதற்குரிய செயல் திட்டத்தை முழுமையாக வடிவமைத்து இதுவரை சுமார் 14 ஆயிரம் கையெழுத்துக்கள் இணையதளம் மூலம் பெற்றுள்ளேன். மேலும் வரும் டிசம்பர் 29ம் தேதிக்குள் என்னால் 1 லட்சம் கையெழுத்தை வாங்கமுடியும் என நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெயர் அமேரிக்கா முழுவதும் பரவி தற்போது அவனது கையெழுத்து இயக்கத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.