September 25, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பேரூராட்சிகள், மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ரூ 5 கோடியே 5௦ லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 7 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,
“இதுபோன்ற வளர்ச்சி மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன்,நகரப்பகுதிகளுக்கு இணையாக கிராமப்பகுதிகளும் மேம்பாடு அடைகின்றது” என்றார்.
இந்நிகழ்ச்சியல் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.