September 26, 2017
பீகார் மாநிலத்தில் 98 வயது முதியவர் முதுநிலை பட்டம் பெற்று, தனது கனவை நனவாக்கிய சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் பாட்னா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் வைஷ்யா.உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் பரேயல்லி நகரை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 192௦ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 1ம் தேதி பிறந்த இவர், கடந்த 1934ம் ஆண்டு தனது மெட்ரிக்குலேஷன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, 1938ம் ஆண்டு, ஆக்ரா பல்கலைகழகத்தில் பி.ஏ பொருளாதாரம் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து 1940ம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்தார்.
தற்போது, நாளந்தா திறந்தவெளி பல்கலைகழகத்தில் பொருளாதார பாடத்தில் தனது 98 வயதில் எம்.ஏ முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
“ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நமது நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று நமது தேச தலைவர் போராட தொடங்கிய காலத்திலிருந்தே ‘வறுமை ஒழிப்பு’ குறித்து கேள்விப்பட்டு வருகிறேன். அந்த வார்த்தை இன்று வரை முழங்கிக்கொண்டு இருப்பதே தவிர, நமது நாட்டில் இன்னும் வறுமை ஒழியவில்லை.
குடிசை பகுதியில் வாழும் மக்களின் நிலையை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று என் மகனிடம் கேமரா ஒன்றை கேட்டேன். அந்த மக்களின் வாழ்க்கை நிலையை குறித்து ஒரு கட்டுரை எழுதி, அதை செய்தித்தாள்களுக்கு அனுப்புவதாக அவனிடம் கூறினேன்” என்று அவர் தெரிவித்தார்.
எம்.ஏ முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றதற்கு பேராசிரியரான மகனும்,பேராசிரியரியான மருமகளும் தான் காரணம் என்றார் ராஜ்குமார் வைஷ்யா.