September 26, 2017 தண்டோரா குழு
எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட பெண் அபுதாபி மருத்துவமனையில்(செப் 25) காலமானார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அஹ்மத் என்னும் 37 வயது பெண், உலகிலேயே அதிக உடல் எடை கொண்டவர் என்று கருதப்பட்டார்.கடந்த பிப்ரவரி மாதம் மும்பை நகரிலுள்ள சைபீ மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவர் சேர்க்கப்பட்டபோது, அவருடைய உடல் எடை 5௦௦ கிலோ இருந்தது. டாக்டர் முப்பாசல் லக்டவாலா தலைமையின் கீழ் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, அவருடைய உடல் எடை குறைய தொடங்கியது.
இந்நிலையில் இமானுக்கு சரியாக சிகிச்சை தரவில்லை என்று அவருடைய சகோதரி எழுப்பிய சர்ச்சையைடுத்து, கடந்த மே மாதம் 4ம் தேதி, அவரை மும்பையிலிருந்து அபுதாபியில் இருந்த புர்ஜீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை அங்கு கொண்டு செல்லும்போது அவருடைய உடல் எடை 176 கிலோ இருந்தது.
அபுதாபியில் சிகிச்சை பெற்று கொண்டு வந்த இமான் அஹ்மத்தின் சிறுநீரகம் செயல் இழந்ததால், அவர் நேற்று அதிகாலை காலமானார்.
“இந்தியாவில் இருந்து இமானை அபுதாபிக்கு அனுப்பியது மிக பெரிய தவறு. அவருடைய உடல்நிலை சரியாகும்வரை, அவரை இங்கேயே வைத்திருக்க வேண்டும். ஆனால், எங்களுடைய பரிந்துரைகளை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அதேபோல், எங்களுடைய சிகிச்சையின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய மரணம் எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் எங்களுக்கு ஒரு குழந்தையை போன்றவர். என்னுடைய வேதனையை வெளிபடுத்த வார்த்தைகள் இல்லை.அவருடைய திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று இமானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.