July 22, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால், பவானி ஆறு மாசடைந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கழிவுகள் கலப்பதை முழுமையாகத் தடுக்காமலும், மாசினை நீக்காவிட்டாலும் பவானி ஆறு முழுமையாகச் சாக்கடையாக மாறும் ஆபத்து உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி பில்லூர் அணையை அடைந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரைக் கடந்து செல்கிறது பவானி ஆறு. சுமார் 32 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையைச் சென்று அடைகிறது . இங்கிருந்து பல லட்சம் மக்களுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உருவாகி கோவை, ஈரோடு, திருப்பூர் என 3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன ஆதாரமாவும் விளங்குகிறது பவானி.
மலைக்காடுகள் வழியாக பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பவானி ஆற்றின் நீர் மக்கள் தொகை மிகுந்துள்ள மேட்டுப்பாளையம் நகரை வந்தடையும் வரை மட்டுமே தூய்மையாக இருக்கிறது.
அதன் பின்னர் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் மேட்டுப்பாளையம் பகுதியின் ஒட்டு மொத்தக் கழிவு நீரும் சுத்திகரிக்கப்பு செய்யப்படாமல், நேரடியாகப் பவானி ஆற்றில் கலக்கிறது. தினசரி 24 மணி நேரமும் நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து சாக்கடைக் கழிவுகளும் தொடர்ந்து பவானி ஆற்றில் கலந்து வருகின்றன.
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நகரத்தின் கழிவு நீர் நேரடியாகப் பவானியாற்றில் சிறு சிறு வாய்க்கால் போல் ஓடி ஆற்றில் கலக்கின்றன. இதனால் மேட்டுப்பாளையம் நகரை கடந்த பின்னர் பவானி ஆறு நதி நீர் மிகவும் மாசடைந்து பாழ்பட்டு போகிறது.
இப்படி ஒட்டுமொத்த கழிவுகள் கலப்பதால் மாசடையும் நீரைப் பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கழிவு நீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே. சிறுமுகை பேரூராட்சி மக்களுக்கும், சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகளைச் சேர்ந்த பல நூறு கிராம மக்களுக்கும் ஆற்றில் இருந்து நீர் ஊறிஞ்சப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள நீரேற்று நிலையங்களில் என்னதான் குளோரின் கலந்து ஆற்று நீரைக் குடிநீராக வழங்கினாலும் அந்நீர் தூய்மை அடைவதில்லை.
இது குறித்து எஸ். செந்தில்குமார், “இந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரை இரு நாட்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்தால் தண்ணீர் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல நோய்கள் வருகின்றன. குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறோம். கழிவு நீர் கலப்பதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்று நீரில் குளிக்கவோ, துணிகளைத் துவைக்கவோ கூட முடியவில்லை. ஆற்றில் இறங்கினால் தோல் அரிப்பு ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். கால்நடைகள் பவானி ஆற்று தண்ணீரை குடிப்பதினால் அவற்றுக்கும் நோய் பாதிப்புகள் உள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியின் மொத்தக் கழிவு நீரும் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாகப் பவானியாற்றில் விடப்படுவதால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இதற்கான நடவடிக்கை குறித்தும் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.
“மேட்டுப்பாளையம் நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து, பின்னர் பவானி ஆற்றில் விட சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கழிவு நீர் கலப்பதைத் தடுத்தால்தான் தண்ணீரின் தூய்மை காக்கப்படும். இதற்காக தமிழக அரசிடம் பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து வரைவு திட்டம் அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெற்றுள்ளோம்.
ரூ. 93 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும். அவ்வாறு பாதாள சாக்கடை நிறைவேற்றப்பட்டால் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பது தடுக்கப்படும். முறையாக சுத்திகரித்து ஆற்றில் விடப்படும்” என்று மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார். (அவரது பதவிக்காலம் திங்கள்கிழமை நிறைவடைந்துவிட்டது)
பவானி முக்கிய ஆற்றைப் பாதுகாக்கவும் தொடர்ந்து மாசடைந்து வருவதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.