August 3, 2017 தண்டோரா குழு
கோவை அருகே உள்ள பல்லடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளினால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை முதல் நாகப்பட்டினம் வரையில் வயதானவர்கள், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பயணிக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக “NH 67” ஆகும். கோவையிலிருந்து சிங்காநல்லூர், பல்லடம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் வரை அமைந்துள்ளது இச்சாலை.
தென் இந்தியாவின் மான்செஸ்ட்டர் என கோவை அழைக்கப்படும் கோவை முக்கிய தொழில் நகரமாக அமைந்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள்,வியாபாரிகள் வர அதிகமாகப் பயன்படுத்தும் வழித்தடமாக பல்லடம் சாலை விளங்குகிறது.
இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் என 500 பேருந்துக்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கில் கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த சாலையைக் கடந்து செல்கின்றன.
இந்நிலையில் பல்லடம் எல்லைக்கு உட்பட்ட காரணம்பேட்டை முதல் மாதாப்பூர் பகுதி வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் சாலையில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகளால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதோடு படுகாயம் அடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் மொத்தம் நடைபெற்ற விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4129 ஆகும். கோவையில் 725 பேரும் அடுத்தபடியாக திருப்பூரில் நடைபெற்ற விபத்துக்களில் 678 பேரும் கிருஷ்ணகிரியில் 654 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என காவல்துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த 14 விபத்துக்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பல்லடம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் இந்த தொடர் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் முத்தையா திருஞானசம்பந்தர் கூறியதாவது:
பயணிகளின் தேவைகளுக்காக இயக்கப்படும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையை பந்தய சாலையாக நினைத்து அதன் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாலும், சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி படிக்கட்டுகளில் தொங்கிய படி சாகசப் பயணம் செய்வதாலும் அது விபத்துகளுக்கு காரணமாகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அலைபேசியில் பேசியவாறே இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் ஏற்படுத்தும் விபத்து அடுத்தவர் உயிருக்கு உலைவைக்கும். இவர்களைப் போன்றவர்களால்தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி தாறுமாறாக வாகனங்களை படுவேகத்தில் இயக்குவதைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறினார்.
“கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறியதாக சுமார் இரு26 ஆிகம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 6000 வழக்குகள் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதற்காகப் போடப்பட்ட வழக்குகள். இந்த ஆண்டு இது வரை சுமார் 18 ஆயிரம் வழக்குகள் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபொழுது, “சாலையோரம் உள்ள செடிகளை வெட்டுவது, சாலை நடுவே உள்ள தடுப்புக்களுக்கு வெள்ளையடிப்பது போன்ற பணிகளுக்குத்தான் அதிகாரமுள்ளது” என்றனர்.
பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 13 கிலோ மீட்டர் சாலையை அவினாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் போல் விரிவுபடுத்தி மையத் தடுப்பு ஏற்படுத்துவதோடு பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து அதிவேகத்துடனும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவரக்ள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.