September 30, 2017 தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், கடந்த 4 மாதத்தில் 41 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் இந்த மழையின் அளவு இயல்பை விட 29% அதிகம் எனவும் தெரிவித்தார். அதைபோல் கடந்த 22 வருடங்களில் இல்லாத அளவுக்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.
இயல்பை விட கோவையில் 169%, சென்னையில் 2% அதிக மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. கன்னியாகுமரி, காரைக்காலில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.