October 3, 2017 தண்டோரா குழு
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு 4 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் 86 நாட்களுக்கு பிறகு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரளாவில் பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் கடந்த 86 நாட்களாக நடிகர் திலீப் சிறையில் உள்ளார். கடந்த ஜூலை 10-ல் சிறையில் அடைக்கப்பட்ட திலீப் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், கேரள உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து 4 முறை திலீப் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திலீப் ஜாமீன் கேட்டு 5-வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போது திலீப்பிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள மாநில உயர்நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளது. எனினும், திலீப் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதைபோல் கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை போலீசார் விரைவாக திரட்டி வருகிறார்கள்.
மேலும், திலீப் மீதான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.