June 15, 2016
தண்டோரா குழு
மக்கள் நாய்களை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதனுடன் விளையாடுவது, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அதையும் தங்களுடன் அழைத்துச் செல்வது போன்றவற்றைக் கடைப்பிடிக்கின்றனர்.
குழந்தைகளும் அதனுடன் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். மக்கள் அதை ஒரு விலங்கு என்று கருதாமல் தங்கள் குடும்பத்தின் அங்கத்தினராகவே கருதி அதை நல்ல முறையில் பராமரிக்கின்றனர்.
ஆனால் மனிதரிடம் காணப்படுகின்ற சில குணங்கள் நாய்களிடமும் காணப்படுகிறது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன.
உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தங்களது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்கள் மீது தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாக பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன.
நாயைப் போன்று குரைத்து அசையும் பொம்மை நாய் கூட விளையாடுவதைப் போன்று செய்கை செய்யும் போது வளர்ப்பு நாய்கள், உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து அந்தப் பொம்மைகளை தாக்கவும் செய்துள்ளன. ஆனால் நாய்களிடம் காணப்படும் இக்குணம் பூனைகளிடம் இல்லை. பூனைகளை விட மனிதனுக்கு ஒப்பான சில உணர்வுகளை நாய்கள் கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆய்வின்படி நாய்கள் முறை தவறி கையாளப்பட்டாலும் அவை புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நாய்கள் சமூகப் பார்வையாளர்களுக்கு இணையானவை என்றும் கருதப்படுகின்றது.
விலங்குகளின் சுபாவம் பற்றிய நிபுணரான பட்ரிசியா மக் கொன்னெல் என்பவர் 'பார் தி லவ் ஆப் எ டாக்’ என்ற தனது புத்தகத்தில் நாய்களின் குணாதிசயங்கள் குறித்து விவரித்துள்ளார். ஆனால் இவரது கூற்றுப்படி மனிதர்களிடையே காணப்படும் பொறாமைக் குணமும் நாய்களிடம் காணப்படும் பொறாமைக் குணமும் வெவ்வேறு தன்மை உடையவை. அவை ஒரே வகையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கலிபோர்னிய பல்கலைக்கழக மாணவர்கள் நாய்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த ஆய்வு செல்லப் பிராணிகளின் தனிப்பட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய மைல்கல் எனக் கூறியுள்ளனர்.