June 15, 2016
dolphin-institute.org
உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் தனது தாய் தந்தையர் அல்லது வாழ்க்கைத் துணை, தன் குழந்தைகள் மற்றும் நண்பர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் உடையவர்கள் என நிலைத்தால் அது தவறு.
ஏனெனில் உயிரினங்களின் மனிதனை அடுத்து அறிவுத் திறன் உடைய உயிரினங்களில் முக்கியமானது டால்பின். இவ்வகை மீன்களிடமும் இந்தப் பழக்கம் உள்ளது என்றால் அது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.
இதில் வித்தியாசம் என்னவென்றால் மனிதர்கள் பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆனால் பேசும் பழக்கம் இல்லாத டால்பின்கள் தனித்துவமான விசில் சத்தங்களை இதற்குப் பயன்படுத்துகின்றன. டால்பின் கன்றுகள் தனது தாயை அழைப்பதற்கு ஒவ்வொன்றும் வித்தியாசமான விசில் சத்தங்களை உபயோகிக்கின்றன.
இதே பழக்கத்தை ஆண் டால்பின்கள் தனது ஜோடியை அழைப்பதற்கும் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவில் உள்ள செயின்ட் அன்ட்ரூவ்ஸ் பல்கலைக் கழகம் புளோரிடாவில் சுகாதாரப் பரிசோதனைக்காக தவணை முறையில் டால்பின்களை ஆராய்ந்தது.
அப்போது இந்த டால்பின்கள் ஒன்றையொன்று பார்க்க முடியாத போதும் ஒலியலைகளை எழுப்பிக் கேட்பதன் மூலம் தம்மை அடையாளம் கண்டுகொண்டதை கண்டுபிடித்தனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் புளோரிடாவின் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் டால்பின்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஒன்றுடன் ஒன்று நெருங்கிப்பழகிய இரு ஆண் டால்பின்களை பிரித்து தனியே அடைத்த போது அவற்றில் ஒன்று ஒலி வடிவங்களை மாற்றி மாற்றி இசைத்து மிமிக்ரி செய்தது.
இந்த ஆராய்ச்சிக்கு முன்னமேயே டால்பின்களின் உலகத்தில் அவை உடல்மொழி (Body Language) மூலம் தொடர்பு கொள்வது கண்டறியப்பட்டிருந்தது. இதைத் தவிர அவை மனிதன் பேசும் மொழியின் சொற்களஞ்சியம், வாக்கியம், கேள்விகள், தேவைகள் ஆகியவற்றையும் சிறிது புரிந்து கொள்ளக் கூடியவை என்பதும் தொலைக்காட்சியைப் பார்த்து அதில் விடப்படும் உத்தரவுகளைப் பின்பற்றும் திறமையுடையன என விலங்கியல் நிபுணர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.