October 4, 2017 தண்டோரா குழு
விருதுநகர் மாவட்டத்தில் கட்டிட உரிமச்சான்று இல்லாமல் மற்றும் கட்டிட உரிமச் சான்று புதுப்பிக்கப்படாமல் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொது கட்டடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பொது கட்டட உரிமைச்சட்டம் 1965-ன் கீழ் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்(பயிற்சி கல்லூரிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட) மாணவர் விடுதிகள்,நூலகங்கள்,மருத்துவமனைகள், சங்கங்கள், நர்சிங்ஹோம், மருந்தகங்கள், தங்கும் விடுதிகள், உணவுவிடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக நோக்கத்திற்காக பயன்படுபவை மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுகட்டடங்களுக்கும் உரிமம் பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியாளர்களை அணுகி, அங்கீகாரிக்கப்பட்ட கட்டிடப் பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டிட உறுதிச்சான்று, பொதுச்சுகாதாரத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்று,உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற துறைகளிடம் பெறப்பட்ட கட்டிட வரைபடம்,
தீயணைப்புத் துறையினரின் தடையில்லாச் சான்று ஆகிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே விண்ணப்பித்து, கட்டிட உரிpமம் பெற்றவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமலோ,காலாவதியான உரிமத்திடனோ பொது கட்டடங்கள் செயல்பட்டால் தடை செய்யப்படுவதுடன்,கட்டட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர்கள் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் வட்டத்தில், கட்டிட உரிமச்சான்று இல்லாமல் மற்றும் கட்டிட உரிமச் சான்று புதுப்பிக்கப்படாமல் செயல்பட்ட 12 உணவு விடுதிகள் சாத்தூர் வட்டாட்சியரால் மூடப்பட்டது.
எனவே இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக கட்டிட உரிமச்சான்று பெறவும் மற்றும் கட்டிட உரிமச் சான்று புதுப்பிக்கவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.