October 5, 2017 தண்டோரா குழு
தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் கெயில் குழாய் எரிவாயு திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் 2012ம் ஆண்டு துவக்கியது.
இதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், கெயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர், குழாய் பதிக்கப்படும் இடங்களுக்கு விவசாயிகளை நேரில் அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விவசாயத்திற்கு பாதிப்பும் வராது என்பதை விளக்க வேண்டும் என்றும், இந்தப் பணிகளை தமிழக அரசு, கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2018 டிசம்பர், 31ம் தேதிக்குள் கெயில் திட்டத்தை முடிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.