சுவாமி : திருநெடுங்களநாதர்.
அம்பாள் : மங்களாம்பிகை.
தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தல வரலாறு:
மங்களநாயகி அம்பாள் இத்தல ஈசனின் ஒப்பிலா நாயகி ஆவாள். நான்கு திருக்கரங்களுடன் தெற்கு பார்த்த வண்ணம் நின்ற எழிற்கோலத்தில் அருள் புரிகிறாள். மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. இவ்வாலய கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது. உள்பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியரும், ஐயனாரும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள் பாலிக்கிறார்கள். இத்தல ஐயனாரை பங்குனி உத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள யோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.
தலச்சிறப்பு:
“இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது” என்று திருமந்திரம் மூலம் தெரிவிக்கிறார் திருமூலர். அதாவது, முற்பிறவியில் புண்ணியங்கள் செய்தவர்கள் இப்பிறவியில் இன்பம் துய்க்கிறார்கள். முற்பிறவியில் பாவச் செயல்கள் செய்தவர்கள் இப்பிறவியில் துன்பத்தில் துவள்கிறார்கள். துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லோரும் நினைத்து, அதற்குரிய வழி தெரியாமல், தவறான வழிமுறைகளைப் பின்பற்றித் துன்பமே அடைகிறார்கள். துன்பம் இல்லாமல் இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ “திருநெடுங்களம்” ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார். இதனை தனது திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் “இடர்களையாய் நெடுங்களம் மேயவனே” என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பதில் இருந்து அறியலாம். இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம். அடுத்தாற் போல் கொடிமரம், பலி பீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகாரத்தை வலம் வரவேண்டும். அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது. அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்சென்றால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் திருநெடுங்களநாதர் அருள் பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் “நித்திய சுந்தரேஸ்வரர்” என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : திருநெடுங்களநாதர் திருக்கோவில்,திருநெடுங்குளம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது