October 12, 2017 தண்டோரா குழு
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாத வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவில் கடந்த 2009-ம் ஆண்டு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவு பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தப்படவில்லை என்றும் இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, இது தொடர்பான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி 19 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும்,அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஆஜராகாத மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதனையடுத்து ஆஜராகாத 13 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினர்.
ஆட்சியர்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்க வேண்டும்.நீர்நிலைகள் முக்கிய ஆதாரம் என்பதால் பாதுகாக்க ஆட்சியர்கள் உரிய பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
மேலும்,நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான உதவிகளை நீதிமன்றம் செய்ய தயாராக இருக்கிறது.பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை காக்க வேண்டும்.நீர்நிலைகளை காப்பாற்ற தேவைப்பட்டால் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினர்.