October 13, 2017 தண்டோரா குழு
யுனெஸ்கோவிலிருந்து வெளியேற போவதாக அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து, இஸ்ரேலும் அறிவித்துள்ளது.
ஐநாவின் கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாற்றிய அமெரிக்கா, யுனெஸ்கோவின் செயல்பாடுகளிலிருந்து விலகியே இருந்தது.
இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவது வரும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரும். அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா நாட்டின் பாமிரா மற்றும் அமெரிக்க நாட்டின் கிராண்ட் கேனியன், பாலஸ்தீனிய நாட்டின் ஹெப்ரான் பகுதியையும் பாரம்பரிய தளங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் நாடு எதிர்ப்பு தெரிவித்தது.கடந்த 2௦11ம் ஆண்டு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்து கொண்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து யுனெஸ்கோவுக்கு வழங்கி வந்த நிதி உதவியை குறைக்க அமெரிக்கா முடிவு செய்தது.
இந்நிலையில் யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அமெரிக்கா விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, இஸ்ரேலும் விலக போவதாக அறிவித்துள்ளது.“அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான முடிவு” என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.