October 16, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் ,பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் நீண்ட காலமாக செபி பேராயம் சார்பில் நடத்தப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத அமைப்பினருடன் வந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நிர்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கிறிஸ்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர், பெரிய நாயக்கன்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் செபி பேராயம் சார்பில் நடத்தப்படும் தேவாலயங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள்
நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் இல்லையெனில் சட்டம் ஓழுங்கினை காரணம்காட்டி மூடப்படும் என்று சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில் செபி பேராயம் அமைப்பினை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடந்த 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து முறையிட்டனர். அப்போது தேவாலயங்கள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இல்லை என்றும்,அதிகாரிகளுடன் வரும் மத அமைப்பினர் தங்களை மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மேலும் மத அமைப்பினர் தங்கள் இஷ்டத்திற்கு வழிபாடு செய்யும் உரிமை இருப்பதால், தேவாலயங்களில் தொடந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர் போர்வையில் இருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தேவாலயத்துக்குள் வந்து மிரட்டுவதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தனர்.