October 16, 2017 தண்டோரா குழு
கர்நாடக சட்டசபையின் பவள விழா கொண்டாடத்தின்போது,எம்.எல்.ஏகளுக்கு தங்க பிஸ்கட் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கர்நாடகமாநிலத்தின் பெங்களூர் நகரில் இருக்கும் ‘‘விதான் சவுதா’’ கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையடுத்து‘‘விதான் சவுதா பவள விழா’’வுக்கு சட்டசபை செயலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விதான் சவுதாவின் பவள விழாகொண்டாட்டம் வரும் 25 மற்றும் 26ம் தேதி நடைபெறவுள்ளது. அந்த விழாவின்போது, 55,000 மதிப்புடைய தங்க பிஸ்கடை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சபை உறுப்பினர்(Member of Legislative Council)ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அந்த தங்க பிஸ்கட்டில் கர்நாடக மாநில சின்னம் பொருத்தப்பட்டிருக்கும்.
வரும் 25-ந்தேதி,நடக்கும் சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும், அந்த விழா கொண்டாட்டத்தின்போது,கர்நாடக மாநிலத்தின் வரலாறு, அதன் நிலம்,நீர், வளங்கள்,மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றை குறித்து கலந்துரையாடல் நடைபெறும். அதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
“விழாவின்போது, அமைச்சர்களுக்கு தங்க பிஸ்கட் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், அமைச்சர்களுக்கு தங்க பிஸ்கட் வழங்கப்படும். மேலும் விதான் சவுதாவில் உள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 6,000 மதிப்புள்ள வெள்ளித்தட்டு வழங்கப்படும்” என்று சட்டசபை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.