October 20, 2017 தண்டோரா குழு
பீகார் மாநிலத்தில் கிராமத்து தலைவர் வீட்டில் நுழைந்ததற்காக வயது முதிர்ந்த நபரை பெண்கள் செருப்பால் அடைத்தும், ஆண்கள் அவரை தரையில் உமிழச் செய்து, அதை நாக்கால் நக்க செய்த கொடுரம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பீகார்ஷரிப் மாவட்டத்திலுள்ள அஜய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் தாகூர்(54). முடிதிருத்தம் செய்பவராக பணியாற்றி வருகிறார். அரசாங்க திட்டம் ஒன்றை பெறுவதற்காக கிராமத்தின் அதிகாரியின் வீட்டிற்கு நேற்று(அக்டோபர் 19) சென்றார். அவர் சென்றபோது, அந்த அதிகாரி வீட்டில் இல்லை. அந்த அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் இருந்துள்ளனர். கிராமத்து அதிகாரி வீட்டில் இல்லை என்று அறியாத மகேஷ், அவருடைய வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அது தான் அவர் செய்த குற்றம்.
தான் வீட்டில் இல்லாதபோது, மகேஷ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், என்று அறிந்த அதிகாரி கடுகோபம் அடைந்துள்ளார். இதனால் பஞ்சாயத்தை கூட்டி, தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மகேஷ் வீட்டிற்குள் நுழைந்ததற்கு தண்டனை விதிக்கமுடிவு செய்தார். அதன்படி, பெண்கள் அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், தரையில் உமிழ்ந்து, அதை நாக்கால் நக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீகார்ஷாரிப் காவல்துறையினர் மகேஷிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த அவமானத்தை அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மகேஷுக்கு தரப்பட்ட தண்டனை குறித்து கடுமையான கண்டனங்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.