June 18, 2016 தண்டோரா குழு
ஐ.எஸ் தீவிரவாதியான ஜிகாதி ஜான் போல மாற விரும்பிய 15 வயது சிறுமி ஒருவர் பிணையக் கைதியை கொல்வது போல் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த லிசா போர்ச் என்ற 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமிக்கு ஐ.எஸ் தீவிரவாதியாக மாற்றப்பட்ட நபருடன் காதல் இருந்துள்ளது. ஆனால், சில காரணங்களால் அந்தக் காதலன் இவளை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான்.
பின்னர், 29 வயதுடைய அப்துல்லா என்ற இஸ்லாமிய நண்பருடன் மீண்டும் இந்தச் சிறுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதல் விவகாரத்தை அறிந்த லிசாவின் தாயார், உன்னை விட இரண்டு மடங்கு வயது உள்ள நபருடன் பழகாதே என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து கோபத்தில் இருந்த லிசா சில நாட்களுக்குப் பிறகு, ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணையக்கைதிகளைக் கொல்லும் வீடியோவை யூடியூபில் பார்த்துள்ளார்.
பிறகுத் தனது காதலனான அப்துல்லாவை வீட்டிற்கு வரவழைத்த லிசா, யூடியூப்பில் அமெரிக்க பிணையக் கைதிகளான டேவிட் ஹைனெஸ் மற்றும் ஆலன் ஹென்னிங் ஆகிய இருவரையும் ஜிகாதி ஜான் தலையை துண்டித்துக் கொல்லும் வீடியோவை பார்த்துள்ளனர்.
பின்னர், அந்த வீடியோவால் கவரப்பட்ட லிசா, தானும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர வேண்டும் எனத் தீர்மானித்தாள். இதனை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சமையல் அறைக்குச் சென்ற லிசா, அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது தாயாரை சுமார் 20 முறை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.
தாயார் இறந்ததற்குப் பிறகு, தனது தாயாரை மர்ம நபர் ஒருவர் கொன்று விட்டுத் தப்பிவிட்டார் என போலீஸ்சாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள கைரேகைகளை வைத்து கொலை செய்தது காதலர்கள் இருவரும் தான் எனக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, காதலர்கள்தான் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து லிசாவிற்கு 9 ஆண்டுகளும், அவளுடைய காதலனுக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இணையதளத்தில் கொலைக் காட்சியைப் பார்த்து தனது தாயையே கொலை செய்த மகளின் செயல் உலகில் உள்ள அனைத்து பெற்றோரையும் விழிப்படையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.