October 23, 2017 தண்டோரா குழு
இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது.சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கோரி, தேர்தல் ஆணையத்திடம்,மனு தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.இதனால்
அ.தி.மு.க.,பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்கியது.இந்நிலையில்,இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கட்டமாகவும் 16ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.அதன்பின்னர், இறுதி விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும்,விசாரணைக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.எனவே, இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.