October 23, 2017 தண்டோரா குழு
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தீரி மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.
இசக்கிமுத்து , விஜயலட்சுமி தம்பதியினர் அதே பகுதியை சேர்ந்த முத்து லட்சுமி என்பவரிடம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி வாங்கியுள்ளனர். அதற்கு பதிலாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். எனினும் முத்துலட்சுமி கந்துவட்டி கேட்டு அவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இசக்கிமுத்து 6 தடவைக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் குடும்பத்துடன் தீ குளித்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.