October 23, 2017 தண்டோரா குழு
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய கார் திருடனை, 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுதில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய நாட்டின் தலைநகரான புதுதில்லியை சேர்ந்தவர் குணால். இவர் புதுதில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கார்களை திருடி விற்று வந்தார். இவர் மீது 62 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தன்னை புதுதில்லி காவல்துறை அதிகாரிகள் எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்று உணர்ந்த குணால், அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு, தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி கொண்டார். குணால் குறித்து புதுதில்லி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த அவர்கள்,நேரு பேலஸ் அருகே குணாலை ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 23) கைது செய்தனர்.
குணாலிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலைக் கொண்டு, கார்களை திருடுவதில் அவருக்கு உடந்தையாக இருந்த இர்ஷாத் அலி மற்றும் முகம்மது ஷாத் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 12 கார்களை காவல்துறையினர் மீட்டனர்.