October 24, 2017 தண்டோரா குழு
உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்தை கட் அவுட் மற்றும் பேனர்களில் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோச்சன் சுந்தரி என்பவர் தமது வீட்டுக்கு அருகே அடிக்கடி பேனர், கட்சி விளம்பரம் வைப்பதால் தொல்லை ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 1959-ம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது திருத்த வேண்டும்.
நீதிமன்றம் கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்காணித்து சுத்தமான சூழ்நிலைகள் நிலவ உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,உயிருடன் இருப்பவர் புகைப்படம் பேனரில் இடம்பெறக்கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.