October 25, 2017
tamilsamayam.com
மும்பையில் நேற்று நடைபெற்ற ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. மும்பையில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 13-10 என்ற புள்ளிக்கணிக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இராண்டாம் பாதி ஆட்டத்தில் குஜராத் அணியினர் அதிரடியாக விளையாடினர். இதனால் இராண்டாம் பாதியில் குஜராத் அணி 7 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 29 புள்ளிகள் எடுத்தது. இறுதியில் 42-17 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரவு 9 மணிக்கு நடைபெற்ற ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் புனே அணி 20-13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இராண்டாம் பாதிநேர ஆட்டத்திலும் புனே அணி சிறப்பாக விளையாடியது.
இருப்பினும் கடைசி பத்துநிமிட ஆட்டத்தில் பாட்னா அணியினர் அதிரடியில் இறங்கினர். பாட்னா அணியின் கேப்டன்பிரதீப் நர்வால் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிகாட்டினார். இறுதியில் பாட்னா அணி 42-32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் கேப்டன் பிரதீப் நர்வால் அதிகபட்சமாக 19 புள்ளிகள் எடுத்தார்.
பாட்னா அணி நாளை சென்னையில் நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணியுடன் விளையாடும்.