October 31, 2017 தண்டோரா குழு
புதுதில்லியிலிருந்து மும்பை நகருக்கு பயணம் செய்த ஜெட் ஏர்வேஸ் விமானம், கடத்தப்படிருப்பதாக கடிதம் மூலம் மிரட்டிய குஜராத்தை சேர்ந்த நகை வியாபாரியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W339 நேற்று(அக்டோபர் 3௦) அதிகாலை 2.55 மணியளவில் புதுதில்லியிலிருந்து மும்பை நகருக்கு 115 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமான கழிவறையில் ஒரு மிரட்டல் கடிதம் இருப்பதை விமான ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார்.
அந்த விமானத்தில் 12 கடத்தல்காரர்களும், விமானத்தின் கார்கோ பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும்,அந்த விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிக்கு இயக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் எழுதி இருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.45 மணியளவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானத்தை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முழுவதுமாக சோதனையிட்டனர். விமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர். அதன் பிறகு, அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, இந்த மிரட்டல் கடிதத்தை விமானத்தில் வைத்தது, குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரிஜூ கிஷோர் சாலா என்பவர் என்றும் அவர் குஜராத் மாநிலத்தில் நடைக்கடை நடத்தி வருகிறார் என்றும், வியாபாரம் காரணமாக அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, சல்லா விமானத்தில்,கரப்பான் பூச்சி இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இனி சாலாவுக்கு விமான பயணங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு உத்தரவிட்டுள்ளார்.