November 1, 2017 தண்டோரா குழு
கோவையில் 900 கோடி மதிப்பீட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரையும்,
121 கோடி மதிப்பீட்டில் உக்கடத்தில் இருந்து ஆத்துபாலம் வரையிலும் இரு பாலங்கள் கட்டும் பணி விரைவில் துவங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவின் போது தெரிவித்தார்.
கோவை காந்திபுரத்தில் 195 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.அதில் பார்க்கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான 1752 மீட்டர் முதல் அடிக்கு மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று மாலை கட்டிமுடிக்கப்பட்ட முதல்கட்ட பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
புதிய பாலம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல் அடுக்கு மேம்பால கல்வெட்டு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான கல்வெட்டினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இதனைதொடர்ந்து பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
120 கோடியில் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில்,பாலத்தின் இரண்டாம் அடுக்கும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கோவையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும்எம்.ஜி.ஆர்நூற்றாண்டு விழாவில் கோவை மாவட்டத்திற்கு தேவைப்படும் திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்படும்.
காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய ரவுண்டானா அமைக்கப்படும் எனவும், கடந்த கால ஆட்சிகளில் திட்டமிடப்பட்டு பணிகளை செய்யமாட்டார்கள் எனவும்,அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும்121 கோடியில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும் எனவும், அதே போல உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரிவரை 9 கீ.மீ தூரம் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதைபோல்,மேற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.பாலங்கள்,புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கோவையில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கோவைமாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தெரிவித்தார்.நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதில் சிறிது தூரம் பயணம் செய்தார். திறப்புவிழா துவங்கி 25 நிமிடத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.