November 2, 2017 தண்டோரா குழு
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால்,சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ மற்றொரு சிறுமி மூவரும் வெளியே தெருவில் விளையாடச்சென்றனர். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் வீட்டருகில் மின் இணைப்பு பெட்டி இருக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர்.
மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர்.
மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட இரண்டு சிறுமிகளையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் சிறுமிகள் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.