June 22, 2016 தண்டோரா குழு
உலகில் தற்போது வாழும் மிக உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் படைத்துள்ள மொங்கோலியரான பாவோ சிசுன், இரண்டு டால்ஃபின்களை காப்பாற்றியுள்ள விவகாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
சீனாவின், லியோனிங் மாகாணத்தில் உள்ள ஃபுஷுன் என்னும் டால்பின்கள் காப்பகத்தில் இரு டால்பின்கள் பிளாஸ்டிக் துகள்களை தவறுதலாக விழுங்கியதால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அவற்றின் வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் துகள்களை மீட்டெடுக்க இயந்திரங்கள் முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து பாவோ சிசுனுக்கு தகவல் தரப்பட்டு அவரை அங்கே வரும்படி அழைப்பு விடப்பட்டது.
பாவோவின் உயரம் சுமார் 7 அடி ஆகும். அவரது கையின் நீளம் மாத்திரம் சுமார் 1.06 மீட்டர்.
டால்பினின் வாய் வழியாகத் தனது கைகளை நுழைத்த பாவோ, பிளாஸ்டிக் துண்டுகளை வெளியில் எடுத்துவிட்டார். இந்த டால்பின்கள் பசி இல்லாமல் மற்றும் மன அழுத்தம் உண்டாகி மிகுந்த வேதனை அடைந்து இருந்தன என்று கடல் நீர்வால் அருங்காட்சியத்தின் அதிகாரிகள் கூறினர்.
மேலும், பாவோவின் கையை டால்பின்கள் கடிக்காதவாறு அவற்றின் வாய் துவாலையால் போர்த்தப்பட்டு இருந்தது. டால்பின்களிடமிருந்து பெருமளவிலான பிளாஸ்டிக் துகள்கள் வெளியே எடுக்கப்பட்டு விட்டதால் அவை விரைவில் மீண்டும் ஆரோக்கியம் அடைந்து விடும் என்று காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாவோ கடந்த வருடம் தான் உலகின் மிக உயரமான மனிதனாக கின்னஸ் சாதனை படைத்தார். முன்னதாக துனிசியாவை சேர்ந்த சார்பிப் என்பவர் இருந்தார். அவரை விட 2 மில்லி மீட்டர் உயரம் கூடுதலாக இருந்ததால் பாவோ இச்சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.