June 22, 2016 தண்டோரா குழு
டெல்லியில் ஷலிமர் பாங்ல் உள்ள ஃவோர்ட்டீஸ் மருத்துவமனை அனைத்து வசதிகளும் அடங்கிய பிரபலமான சிறந்த மருத்துவமனை. பேர் பெற்ற மருத்துவமனை என்பதால் இவ்விடம் சிகிச்சைக்கு வருவோர், தங்களுக்குத் திறமையான மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு நுழைவர்.
அதே நம்பிக்கையோடுதான் அசோக் விஹாரைச் சேர்ந்த ராம் ரெய் தன் மகன் ரவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 24 வயதான CA படிக்கும் மாணவனான ரவியை மாடிப் படியிலிருந்து தடுக்கி விழுந்ததனால் ஏற்பட்ட எலும்பு முறிவிற்குச் சிறந்த சிகிச்சை கிட்டும் என்ற எதிர்பார்ப்போடு ஃபொர்ட்டீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்களும் ரவியைப் பரிசோதித்து வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து நான்கு ஊசிகளை ஆதாரத்திற்காகப் போடவேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவற்றிற்குத் தேவையான X-ray, CT scan போன்ற பலவிதமான பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மிகச் சிறந்த ஹாஸ்பிடல் என்பதனால் எந்தவித தயக்கமுமின்றி ரவியின் பெற்றோர்கள் அறுவைசிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் மயக்கம் தெளிந்த ரவி தன் வலது காலுக்குப் பதில் இடது கால் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். மருத்துவர்களின் கவனக் குறைவால் ஏற்பட்ட விளைவால் ரவியின் குடும்பத்தினர் ஆத்திரமுற்று காவல்துறையை அணுகி வழக்குத் தொடுத்தனர்.
விஷயம் கைமீறி போன காரணத்தால் மருத்துவமனை தனது தவற்றை ஒப்புக்கொண்டது. நோயாளிகளின் பாதுகாப்பே தங்களுக்குப் பிரதானம், ஆகையால் தகுந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
ரவியின் பெற்றோர் ரவியை வேறு ஒரு ஹாஸ்பிடலிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சமாதானம் செய்யும் வகையில் பேசியுள்ளனர். இது சிறிய விஷயம் தான் என்றும், விரைவில் சரி செய்து விடலாம் என்றும் சமாளிக்க முனைந்துள்ளனர்.
எது எவ்வாறாயினும் மருத்துவத்தில் தவறு என்ற சொல் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.