November 8, 2017 தண்டோரா குழு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலியானவர்களுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கோவையில் நினைவாஞ்சலி நடத்தப்பட்டது.
கடந்த நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஆனால், இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியிலும் வரிசையில் நின்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மோடியின் இந்த பணமதிப்பிழப்பு கண்டிக்கும் விதமாக வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி நவம்பர் 8ம் தேதியை பொருளாதார அடக்குமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைமை அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முஜீப் ரஹ்மான் தலைமையில் பணமதிப்பிழப்பு உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், திருவோடு ஏந்தியும் மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.