June 24, 2016 தண்டோரா குழு
பொதுவாக நம்முடைய வீடுகளில் இரண்டு நாய்களைப் பராமரிப்பது என்பதே பெரிய விஷயம். அப்படி இருக்க சுமார் 450 நாய்களைப் பராமரிக்க ஒருவரால் முடியுமா? ஆனால் ஐரோப்பாவில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அதைச்செய்து காட்டி அவற்றிற்காகப் போராடியும் உள்ளார்.
மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவுக்கு இடையே அமைந்த செர்பியா நாட்டில் உள்ள நிஸ் என்னும் நகரத்தில் நாற்பத்து ஐந்து வயதுடைய ஸாஸா பெஸிக் என்னும் நபர், சுமார் 450 தெரு நாய்களைப் பராமரித்து வருகிறார்.
அவர் தற்போது வசித்து வரும் இடத்தை, அந்த நகராட்சி திடீரென உரிமை கொண்டாடுவதால், அவர் பராமரிக்கும் தெரு நாய்களுடன் வேறு இடத்துக்குச் செல்லுமாறு அந்த நகராட்சி அதிகாரிகள் காட்டயபடுத்துகின்றனர். அதை அறிந்த அங்குள்ள விலங்கு நல உரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்நகராட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
முதலில் நான்கு தெரு நாய்க்குட்டிகள் அவரிடம் வந்து சேர்ந்தன. அவற்றின் மீது இரக்கம் கொண்ட அவர், அவற்றை வளர்க்கத் தொடங்கினார். நாளடைவில் ஊரில் உள்ள தெரு நாய்களை அவர் பராமரிக்கத் தொடங்கினார்.
அது குறித்து பெஸிக் பேசும் போது, இந்த நாய்கள் எல்லாம் பகலில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும். இரவில்தான் அவற்றைக் கூண்டுக்குள் அடைப்போம். என்னுடன் மேலும் ஆறு பேர் இந்த நாய்களை அன்புடன் பராமரித்து வருகின்றனர். இவற்றுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கச் செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் சுமார் 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் யூரோக்கள் அதாவது சுமார் 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும், உள்ளூரில் உள்ள சிலரும் உதவி செய்வதால் ஏதோ ஓரளவு நிலைமையைச் சமாளிக்க முடிகிறது. நாங்கள் பராமரிக்கும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதோடு, கருத்தடையும் செய்துள்ளோம். அவை காணாமல் போய் விட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு அவற்றின் உடலில் மைக்ரோசிப்பையும் பொருத்தியுள்ளோம்.
எங்களின் சொந்த வாழ்க்கையைக் கூட நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் இவற்றைப் பராமரித்து வருகிறோம். சில நல்ல உள்ளங்களால் இதுவரை சுமார் 250 தெரு நாய்கள் வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக மாறியுள்ளன என்று அவர் கூறினார்.
செர்பியாவில் 2 லட்சத்து 80 ஆயிரம் நாய்கள் பதிவு செய்யப்பட்டு வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவது இயலாத காரியம் என்று அந்நாட்டின் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.