November 9, 2017 தண்டோரா குழு
சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு நாளை முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர்
வழங்கப்படும் என்று செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் ஆகியோர் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகர்,
புவனேஸ்வரி நகர், இராம்நகர், மடிப்பாக்கம், சதாசிவம் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை
வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை-11 பகுதியிலிருந்து குழாய்
கல்வெட்டுகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதையும், அதில் ஏற்பட்டிருந்த
அடைப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்கள்.
ஆய்விற்கு அமைச்சர் வேலுமணி அவர்கள் ரிப்பன் மாளிகையில் அலுவலர்களுடன் நடந்த ஆடய்வுக்கூட்டத்திற்கு பின் தெரிவிக்கையில்,
சென்னை மாநகரில் 30.10.2017 முதல் 07.11.2017 வரை 47.38 செ.மீ. அளவு கனமழை
பதிவாகி உள்ளது. இந்த கனமழையினால் மழைநீர் தேங்கிய 269 இடங்களில் 155 மோட்டார்
பம்புகள் மூலம் 180 இடங்களில் உடனடியாக அகற்றப்பட்டு, மீதமுள்ள 89 இடங்களில் மழைநீர்
அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்று வருகிறது.
அதிகளவு மழைநீர் தேங்கியுள்ள கார்கில்நகர், இராஜாஜி நகர், பெரியார் நகர், விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர் போன்ற இடங்களில் 134 மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளன. மழையின் காரணமாக விழுந்த 88 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்வாய் இல்லாத இடங்களில் 105 ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு
மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே தேங்கி நிற்கும் கால்வாய் அடைப்புகளும்
மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கு 45 டிப்பர் லாரிகளும், 235 காம்பேக்டர்கள், 20 பாப்காட்
இயந்திரங்கள் என மொத்தம் 405 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும்,சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தைச் சார்ந்த 43 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 113 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 30 ஜெட்ராடிங் கம் உறிஞ்சம் இயந்திரங்கள், 238 தூர்வாரும்
இயந்திரங்கள், 20 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 444 வாகனங்கள் மழைநீர் அகற்றும் பணியில்
உள்ளன.
மேலும், சென்னை மாநகராட்சியில் 06.11.2017 அன்று 322 மருத்துவ முகாம்கள்
நடத்தப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் 11,817 ஆண்கள், 17,301 பெண்கள், 9,839 குழந்தைகள் என மொத்தம் 38,957 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்ள்ள அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 892 மருத்துவ முகாம்கள் மற்றும் 173 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1065 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 92,040 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
அனைத்து நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் அவரவர் இருப்பிடத்திற்கு
திரும்பிவிட்டனர். தாழ்வான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் வீடுகளில் சமையல் செய்ய
இயலாத நிலையில் உள்ள 10,930 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள்
வழங்கப்பட்டது.நிவாரண மையங்களில் மொத்தம் 2,92,450 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 22 சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில்
உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், 044-2536 7823, 2538 4965, 2538
3694 ஆகியவற்றின் வழியாக 6,955 புகார்கள் பெறப்பட்டு, 6347 புகார்களுக்கு விரைந்து தீர்வு
காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 608 புகார்களுக்கு தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை
கூடுதலாக்கி விநியோகிக்க, வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன்
லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சிக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர்
வழங்கப்படும்.
குடிநீர் செல்லும் குடிநீர் விநியோகக் குழாயின் கடைசிப் பகுதியிலும், குறைந்தபட்ச
குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்தபின் குடிநீர் வழங்கப்படும். ஏரிகளின்
நீர் இருப்பு பூண்டி ஏரியில் 656 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 464 மில்லியன்
கன அடியும், புழல் ஏரியில் 11152 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1211 மில்லியன்
கன அடியும், வீராணம் ஏரியில் 881 மில்லியன் கன அடியும் உள்ளது.
5 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் 35 விழுக்காடு நீர் மட்டுமே ஏரிகளில் வந்துள்ளது. அனைத்து ஏரிகளும் தமிழக அரசின் சார்பில் அலுவலர்கள் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகையால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில்
மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர தீர்வாக ரூ.4034 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர்
வடிகால்வாய்கள் அமைக்கப்படும் என மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014-15ம்
ஆண்டு 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில்,சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.1101.43 கோடி மதிப்பீட்டில் அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் 80 சதவீதம் முடிவுற்றுள்ளது.
ரூ.1243.15 கோடி மதிப்பீட்டில் கோவளம் வடிநிலப்பகுதியில் 326 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்
வடிகால் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன்
செயலாக்கப்பட உள்ளது. சுமார் 103 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இப்பகுதியை
எம்1-பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், எம்2-தெற்கு
பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் எம்3-தெற்கு கடற்கரையை
ஒட்டியுள்ள பகுதி (பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர்,
கானத்தூர், உத்தண்டி) ஆகிய 3 திட்டக்கூறுகளாக பிரித்து செயலாக்கப்பட உள்ளது.
இதில் எம்3 திட்டக்கூறு பணிகளுக்கான திட்ட அறிக்கையினை மேம்படுத்த KFW
வங்கியால் ஜெர்மன் நாட்டினை சேர்ந்த M/S காக்ஸ் கன்ஸல்ட்டன்ட்ஸ் என்ற கலந்தாலோசகர்
நியமனம் செய்யப்பட்டு, அந்நிறுவனம் தனது ஆய்வுகளை நடத்தி முடித்து பணிகளுக்கான
ஒப்புதலை வழங்கும் நிலையில் உள்ளது.
எம்1 மற்றும் எம்2 திட்டக்கூறுகளை பொறுத்தவரையில் (துரைப்பாக்கம், பெருங்குடி,
பள்ளிக்கரணை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம்) ஏற்கனவே
தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை KFW வங்கியினால் கூர்ந்தாய்வு செய்யும் பணி
நடைபெற்று வருகிறது.
கூர்ந்தாய்வு பணிகள் மே-2018ல் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இத்திட்டம் செயல்வடிவம் பெறும்பொழுது, ஆலந்தூர் மண்டலம், பெருங்குடி மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் வாழும் 8.80 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான மென்பொருள் நிறுவனங்களும் பயன்பெறும்.
ரூ.1881.66 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் 426 கி.மீ. நீளத்திற்கு
மழைநீர் வடிகால் அமைக்க திருத்திய திட்ட அறிக்கை இறுதி செய்யும் பணிகள் முடிவுறும்
நிலையில் உள்ளது. இப்பணிகளால் திருவொற்றியூர், மணலி, மாதவரம், கொளத்தூர்,
வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளை சார்ந்த 15 இலட்சம் மக்கள்
பயன்பெறுவார்கள். இப்பணிகள் முடிவுறும் தருவாயில் மழைநீர் தேங்குவதற்கான நிரந்தர தீர்வு
காணப்படும் என தெரிவித்தார்.