November 18, 2017 தண்டோரா குழு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில் “துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பாதுகாப்புத்துறையில் தனியாருடைய பங்களிப்பை வரவேற்பதாகவும், அதே சமயம் நாட்டின் பாதுகாப்புக்கு குறைபாடு வந்திடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எந்த எல்லை வரை தனியார் பங்களிப்பை அனுமதிக்க வேண்டும் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இந்திய கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த குண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மீனவர்களை சுட்ட குண்டு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.