November 20, 2017
சினிமா என்பது மிகப் பிரம்மாண்டமான மாற்றங்களை மனிதர்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய சாதனம் என்றே சொல்லலாம். ஒரே ஒரு நல்ல திரைப்படம் பார்த்தாலே அந்த உணர்வு நமது மனதில் நீங்காமல் நிறைந்திருப்பதை அறிய முடியும்.வெறும் மூன்று மணி நேரம் என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் செல்லும் ரசிகன் பார்வையில்சினிமா என்பது பொழுதுபோக்கு தான்.
ஆனால், வெறும் பொழுதுபோக்காக மட்டும் சினிமாவை பார்க்கும் ரசிகனுக்கு சமூக சார்ந்த விஷயங்களையும் எடுத்துரைப்பது ஒரு நல்ல படைப்பாளியின் வேலை.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை முந்தைய தலைமுறை இயக்குனர்களான பாலுமகேந்திரா, மகேந்திரன், கே.பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்கள் குடும்பம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் பல படங்களை தந்துள்ளார்கள். ஆனால், தற்போது காலத்தின் மாற்றமோ அல்லது ரசிகர்களின் தேவையோ என்னவோ தமிழ் சினிமாவின் நிலை தற்போது மாறிக்கொண்டே வருகிறது. தற்போதெல்லாம் கவர்ச்சியும் ஆபாச வசனங்களும் இருந்தால் தான் படம் ஓடும் என்று பெரும்பாலான திரைத்துறையினர் நினைக்கிறார்கள்/திணிக்கிறார்கள்.
அவர்களை தான் நாம் பெரிய இயக்குனர்கள் என்று சொல்கிறோம்.அந்த வகையில் தற்போது வரும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் படம் முழுவதும் ஆபாச வசனங்கள் நிறைந்ததாகவே உள்ளது. அதிலும் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் இரட்டை அர்த்த வசனங்களில் தான் தற்போது வரும் படங்களில் காமெடியும் இடம் பெறுகிறது.
உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஹரே ஹரே மாஹாதேவகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். விவேக், வடிவேல் போன்றோர் தங்கள் நகைச்சுவையில் கருத்துக்களை கூறிவந்தனர். ஆனால், தற்போது வரும் சில காமெடி நடிகர்கள் தங்கள் நகைச்சுவையில் பெரும்பாலும் ஆபாச வசனங்களை பேசி வருகின்றனர். இதனால் குடும்பத்துடன் படம் பார்க்க செல்பவர்களுக்கு தற்போது சில காட்சிகள் முகம் சுழிக்க தான் வைக்கிறது. இரட்டை அர்த்த வசனங்களை தான் இன்றைய இளைஞர்களும் கை தட்டி ரசிக்கிறார்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் தொடரும் இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாச வார்த்தைகளும் ஏற்புடையதா ? இது குறித்து இன்றைய தலைமுறையினர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.
இரா.சி.சுந்தரமயில் (குடும்பத் தலைவி )
ஆபாச வசனங்கள் இல்லாமல் நகைச்சுவை பண்ண முடியும். ஆனால், தற்போது மக்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று இத்தகைய ஆபாச வசனங்களை திணிக்கிறார்கள். இதனால் குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்க்க முடியவில்லை. ஆபாச வசனங்கள் பேசி எளிதில் மக்களை கவர முடியும் என நினைத்து தற்போது நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால் எந்த ஒரு பயனும் இல்லை.ஆபாச வசனங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வந்தால் நகைச்சுவை தரம் குறைந்துவிடும்.
துவாரகேஷ் (கல்லூரி மாணவர் )
தற்போது வரும் ஒரு சில படங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை நண்பர்களுடன் சென்று படம் பார்க்கும் போது நன்றாக தெரியும் அதே நேரத்தில் குடும்பத்துடன் செல்லும் போது முகம் சுழிக்க வைக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் செல்லக்கூடிய சினிமா இன்றைக்கு ஒரு சிலரை மட்டும் கவரக்கூடியதாகி விட்டது.
அன்புச்செல்வி (கல்லூரி பேராசிரியர் )
இன்றைய இளைஞர்களை எதிர் நோக்கி தான் நம் நாடு பயணிக்கிறது. ஒரு சமூகம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறதா என்பதை நிரூபிக்க இளைஞர்களின் செயல்பாடுகளே காரணமாக இருக்கிறது. ஆனால் இன்று இளைஞர்களை வழிகெடுக்கும் வகையில் சில சினிமாக்கள் உள்ளது. இன்று நகைச்சுவை என்றாலே இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுவது போல் ஆகிவிட்டது.மக்களை சிரிக்க வைக்கும் என்ற தரமற்ற எண்ணத்துடன் சில இயக்குநர்கள் செயல்படுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
குமார் (கல்லூரி மாணவர்)
சினிமா என்பது பொழுதுபோக்காக இருந்தாலும் அதில் சில சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள் இருக்கும்.ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமாவில் இருந்த அளவு கருத்துக்கள் இன்றைய தமிழ் சினிமாவில் இல்லையே. வெறும் பொழுதுபோக்காக தான் இருக்கிறது.சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள் காணாமல்போய் இரட்டை அர்த்த வசனங்கள் தான் உள்ளது.
ம.ஜெயபாண்டியன் (ஆசிரியர் )
அன்றைய சினிமாவில் இடம் பெரும் நகைச்சுவையும் இன்றைய சினிமாவில் இடம் பெரும் நகைச்சுவையும் ஒப்பிட்டு பார்க்கையில் நகைச்சுவை கேவலமாக தெரிகிறது. தரமில்லாத நகைச்சுவையாகவே தெரிகிறது. இரட்டை அர்த்த வசனங்கள் இக்கால சமுதாயத்திற்கு எதிரானது. இது இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒப்பானது அல்ல. 20ல் இருந்து 30 சதவிகிதம் மக்கள் இத்தகைய நகைச்சுவையை விரும்புவதால் இது போன்ற நகைச்சுவைகள் வரவேற்க்கப்படுகின்றன.
நித்திஷ் (பொறியாளர் )
தற்போது எடுக்கப்படும் ஒரு சில படங்களில் ஆபாச வார்த்தையும் இரட்டை அர்த்த வார்த்தையும் அதிகமாக தான் வருகிறது. ஏனெனில் மக்களும் அது போன்ற நகைச்சுவையை தான் விரும்புகிறார்கள்.காலத்திற்கு ஏற்ப சினிமாவும் வளர்ந்து விட்டது அவ்வளவு தான்.சமூகத்தில் எளிதில் நடப்பதை தான் சினிமாவில் பிரதிபலிக்கிறார்கள். உலக சினிமாவை ஒப்பிடும் போது தமிழ் சினிமாவில் அது போன்ற வசனங்கள் இடம் பெறுவது குறைவே. தற்போது இது போன்ற படங்கள் மட்டும் வருதில்லை கருத்து சொல்லும் படங்களும் வருகின்றது.