June 27, 2016
தண்டோரா குழு
காஷ்மீரின் பாம்பொரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த (CRPF) எட்டு பாதுகாப்புக் காவலர்கள் தீவிரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
LeT தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு தற்கொலைப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே போலீஸ் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நமது தரப்பில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். மற்றும் 22 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இதில் இறந்தவர்கள் சப் இன்ஸ்பெக்டர், ஜெய்சந்திரன், சஞ்சய் குமார், ஹெட் கான்ஸ்டபிள், பிர் சிங்க், ஜக்டர் சிங்க், கான்ஸ்டபிள், சந்தோஷ் சஹு, சதீஷ் சண்ட், கைலாஷ், ராஜேஷ் போன்றோர் ஆவர்.
அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்டி, தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புப்படுத்தி, தன்னை அம்மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்தப் படுகொலையைத் தான் கண்டிப்பதாகவும், ரமலான் மாதத்தில் நடைபெற்ற கொடூரம் மதத்தின் புனிதத்தை கெடுக்கவல்லது என்றும் கூறினார்.
ரமலான் மாதம் பக்தியோடும், சிரத்தையோடும் நோன்பு மேற்கொள்ளவேண்டிய மாதம். அல்லா இஸ்லாமிய மதத்தினர் அனைவரையும் இந்த நோன்பின் போது கெட்ட மற்றும் பாவச் செயல்களிலிருந்து விலகி இருக்கும் படி ஆணையிட்டுள்ளார். இத்தகைய தீவிரவாதச் செயல் காஷ்மீரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் தெரிவித்தார்.
முந்தைய காலத்தில் உலகத்தின் பெரிய நாடுகள் அனைத்தும், தீவிரவாதம் காரணமாக காஷ்மீரில் நிலவும் விரும்பத்தகாத சூழ்நிலையினால் தங்கள் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இங்கு வர தடைவிதித்திருந்தனர்.
ஆனால், தற்போது காஷ்மீரின் ஸ்திரத்தன்மையில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டு தங்களது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பயணிகளை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வெளிநாட்டினரை அச்சத்தில் ஆழ்த்தும். அதன் மூலம் சுற்றுலாத்துறை வருமானம் பாதிக்கப்படும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் எச்சரித்தார்.
இத்தகைய செயலால் மகன் தாயிடமிருந்தும், சகோதரன் சகோதரியிடமிருந்தும், பிரிகிறார்கள். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைக்க நேரிடுகிறது.
தங்களது கடமைகளை ஆற்றும் இத்தகைய தேசப்பாதுகாவலர்களை கொலை செய்வது காஷ்மீரின் பெயருக்கு இழுக்கு உண்டாக்குவதாகும், மற்றும் இவர்களது செயல் இஸ்லாம் மதத்திற்கே களங்கம் கற்பிப்பதாகும் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இவருடைய கருத்துக்கள் எதிர்க் கட்சியினரிடையே மிகுந்த விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை மெஹ்பூபா அவர்கள் தீவிரவாதத்திற்கும், மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவந்தார், ஆனால் தற்போது திடீரென்று தீவிரவாதம் இஸ்லாம் மதத்தின் கிளை என்று கூறியிருப்பது முஸ்லீம்கள் அனைவரையும் வெட்கமடையச் செய்வதாகும் என்று நேஷனல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜுனைட் மாட்டு கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரான ஒமர் அப்துல்லாவும் மெஹ்பூபாவின் கருத்தைக் கண்டித்துள்ளார். தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே என்று கூறும் கோஷ்டியுடன் முஃப்டியும் சேர்ந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.