November 21, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் மாணவ மாணவியருக்கு எவ்வித தடையுமின்றி முட்டைகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
உற்பத்தி குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் முட்டை விலை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் மாணவ மாணவியருக்கு வழங்கபடும் முட்டை நிறுத்தப்பட்டதாக செய்திகள் பரவின.
இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள், கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த சரியான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை விநியோகத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வந்த செய்தியில் உண்மையில்லை.
வெளிச்சந்தையில் உள்ள முட்டை விலை உயர்வினால் இத்திட்டத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக செயல்படுத்தவும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாநில அரசு செயல்படுவதாகவும் சரோஜா கூறியுள்ளார்.
மேலும், 2017-18 ஆம் ஆண்டிற்கு ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு, ஜுலை 2018 வரை ஓராண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விவகாரத்தில் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல்களை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.