November 22, 2017 தண்டோரா குழு
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வினியோகம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆலமரம் தெருவில் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 282 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 140 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் 250 முட்டைகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று(நவ 21) மதியம் சத்துணவு அமைப்பாளர் சகிலா, சோற்றில் 100 முட்டைகளை வேக வைக்க சமையல் பணியாளரிடம் கொடுத்தார்.சிறிது நேரம் கழித்து வேக வைத்த முட்டைகளை உரித்தபோது அவை அழுகிய நிலையில் இருந்தன. புழு, பூச்சும் காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மீதி இருந்த முட்டைகளை வேக வைத்தபோதும் அதில் பெரும்பாலான முட்டைகள் அழுகியே காணப்பட்டன. இதனால் மதிய உணவின் போது பெரும்பாலான மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜராஜன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது முட்டைகள் பள்ளி வரும் போதே அழுகிய நிலையில் இருந்ததும், அதனை கவனிக்காமல் சத்துணவு ஊழியர்கள் வேக வைத்ததும் தெரிய வந்தது.
அழுகிய முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருத்தணி நகராட்சி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு முட்டைகளை வழங்குவது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தனது கடமையிலிருந்து தவறியது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை கண்காணிக்க தவறிய திருத்தணி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளிக்கு முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு அமைப்பாளர்கள் ஒப்பந்ததாரர்களிடமிருந்து முட்டைகளை பெற்றுக் கொள்ளும்போது முட்டையின் தரம் குறித்து உரிய ஆய்வுக்கு பின்னரே பெற்றுக் கொள்ள வேண்டும்.
முட்டைகளை சமையலுக்கு பயன்ப்படுத்துவதற்கு முன்னரும் முட்டையின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், (சத்துணவு), தலைமை ஆசிரியர், மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தவறும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.