June 28, 2016
தண்டோரா குழு
பெங்களூரு மாநகரின் முதல் பெண் கால் டாக்சி டிரைவர் பாரதி வீராத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு மாநகரின் முதல் பெண் கால் டாக்சி டிரைவர் பாரதி வீராத்(40). இவர் 2013ம் ஆண்டு கால்டாக்சி டிரைவராக பணிபுரிய ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் அதன் பின் கால்டாக்சி டிரைவர் வேலையை விரும்பித் தேர்வு செய்து பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு மாநகரின் சஞ்சய் நகர் காவல் எல்லைக்குட்பட்ட நாகஷெட்டி ஹல்லியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, அவரது கார் எங்கும் செல்லாமல் நிற்பதைக் கண்ட வீட்டின் உரிமையார், சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தார். அப்போது பாரதி தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து சஞ்சய் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவரான பாரதி தனது சொந்த ஊருக்குச் செல்லவுள்ளதாகவும், அதற்காக கேஸ் கனெக்சனை ஆந்திராவிற்கு மாற்றியுள்ளதாகவும், வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாரதி கதவைப் பூட்டாமல், தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அதே நேரம் கதவை யாரும் திறக்கமுடியாத படி மூடி வைத்திருந்துள்ளார்.
இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எந்தக் கடிதமும் எழுதவில்லை. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.