November 23, 2017 தண்டோரா குழு
ஜிம்பாப்வே நாட்டின் குடியரசு தலைவர் ராஜினாமா செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து,அந்நாட்டின் மக்கள் தேசிய கொடியை அசைத்தபடி உற்சாக கரகோஷம் எழுப்பி, ஆடிப்பாடி கொண்டாடினர்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த 1980ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து அந்த நாட்டை கடந்த 37 ஆண்டுகளாக குடியரசு தலைவராக இருந்தவர் ராபர்ட் முகாபே(93).சர்வதிகார போக்குடன் நடந்துக்கொண்ட அவரை, இராணுவம் காவலில் எடுத்து கொண்டபின்,அவரை தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேற்றியது. ஆனால், முகாபே அதேநாள் மாலையில் தொலைக்காட்சியில் உரையாற்றி குடியரசு தலைவர் பதவியை விட்டு விலக மாட்டேன் என்று தெரிவித்தார்.
அவரை பதவி விலகும்படி ராணுவமும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, அவரை குடியரசு தலைவர் பதவியிலிருந்து நீக்க பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில் ராபர்ட் முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
“ஜிம்பாப்வே நாட்டின் மக்களின் நலன் கருதியும், அதிகாரத்தை சமாதான முறையில் மாற்றுவதற்கான தேவைக்காகவும், தான் குடியரசு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் முகாபேயின் ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகவும்” சபாநாயகர் ஜேக்கப் முடன்டா தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜினாமா அறிவிப்பை கேட்ட மக்கள் ஜிம்பாப்வே தேசிய கொடியை அசைத்தபடி உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடினர்.பொதுமக்கள் மட்டுமின்றி ஜிம்பாப்வேயின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முகாபே ராஜினாமா குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.