November 24, 2017 பி.எம்.முஹமது ஆஷிக்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவைக்கு தமிழக வரலாற்றில் என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு. கோவையை ரசிக்காதவர்களும், கோவை மக்களை நேசிக்காதவர்களும் மிகவும் குறைவு. இயற்கை சூழல் தட்பவெப்பம், சிறுவாணி தண்ணீர், மரியாதை நிறைந்த பேச்சு மற்றவர்களுக்கு உதவும் குணம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது கோவை நகரம். இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.
ஆரம்பத்தில் சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வது ஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. பின் 14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகலாயர்கள் கோவையைக் கைப்பற்றினர். மதுரையை ஆண்டு வந்த முகலாய மன்னர்தான் கோவையையும் ஆட்சிபுரிந்தார். 14ம் நூற்றாண்டின் இறுதியில் முகலாய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம்கோவை வந்ததாம். தங்களது கீழ் வந்த பகுதிகளான கோவை, வேலூர், தஞ்சாவூர், சந்திரகிரி, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்களை நாயக்கர்கள் நியமித்தார்கள். இவர்களுக்கு பாளையக்காரர்கள் என்று பெயர். இந்தக் காலகட்டத்தில் கோவை நகரமாக இருக்கவில்லை. 3000 பேர் மட்டுமே வசித்து வந்த சிறிய கிராமமமாகத்தான் இருந்தது. 1760களில் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார். அவரது நிர்வாகத்தின்கீழ் கோவை பிராந்தியமும் வந்தது. ஹைதர் அலி இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து கடுமையாக போராடினார். மைசூர் சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது.திப்பு சுல்தானின் மரணத்தோடு இந்தப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கோவையை சென்னை மாகாணத்தோடு ஆங்கிலேயர்கள் இணைத்தனர். 1804ம் ஆண்டு கோவையை தலைநகரமாகக் கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1848ம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. முதல் நகராட்சித் தலைவராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இப்படியாகநகரமாக உருவெடுத்த கோவை, மாநகரமாக அதாவது மாநகராட்சியாக 1979ம் ஆண்டு அந்தஸ்து பெற்றது. இப்படி பல வரலாறுகள் கோவைக்கு உண்டு.
தொழில் நகரமான கோவை தற்போது நவீன மருத்துவமனைகள், சர்வதேசப் பள்ளிகள், கல்லூரிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி. பார்க்குகள் என அசுர வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வணிக வளாகங்கள் கோவையில் தான் உள்ளன. இது ஒருபுறம் இருக்க இங்கு கிடைக்கும் சிறுவாணி தண்ணீரின் சுவைக்கே பலரும் கோவைக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில், கோவை உருவாகி இன்றுடன் 213 ஆண்டுகள் ஆகின்றது. கோவையின் சிறப்பு குறித்தும் இன்னும் கோவைக்கு இன்னும் என்ன தேவை என்பதும் குறித்தும் நம்ம ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா!
அப்துல் ஹக்கீம் – செய்தி தொடர்பு செயலாளர் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த்
கோவையில் பிறந்தவன் என்ற பெருமையில் சொல்கிறேன் கோவை வளர்ந்த நகரம் மட்டுமல்ல தோழமை நகரும் தான். இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு தொழில் செய்து வருகிறார்கள்.சென்னைக்கு அடுத்து கோவையில் நீங்கள் எல்லா ஊர் மக்களையும் காண முடியும். இந்தியாவிற்கு தோல் கொடுக்கும் கோவைக்கு இன்னும் நிறைய ரயில் விமான போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது.அது கிடைத்தால் கோவை இந்தியாவின் முன்னணி நகரமாக இருக்கும்.
அஞ்சலி – சமூக ஆர்வலர்
கொஞ்சி பேசும் கொங்கு தமிழ் தான் கோவைக்கே சிறப்பு. இயற்கை வளங்கள், மண் வளம், காடுகள், குளங்கள், சுவையான மற்றொரு சிறப்பு. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கங்கள் கோவையின் வளர்ச்சி. கோவை வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் கடவுள் கொடுத்த இயற்கை வளங்கள் அழிந்து கொண்டே போகிறது என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம். குளங்கள் பராமரிப்பின்மை, காடுகளை அழித்தல், பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றால் கோவையின் வளம் குறைந்துவிட்டது. இதனால் தான் தண்ணீர் தட்டுப்பாடு வருகிறது. நாம் அதனை முறையாக பராமரித்தால் நம் கோவை நமக்கு திரும்ப கிடைக்கும்.
செ.விவேகானந்தன் – ஆசிரியர்
நான் தேனியிலிருந்து கோவை வந்து கிட்டத்தட்தட்ட 10 ஆண்டுகளாகிறது,நான் வந்த போது இந்த கோவை மக்கள் என்ன அன்பையையும் , மரியாதையையும் , பரிமாறினார்களோ அதே அன்பும் மரியாதையையும் இன்றும் தொடர்கிறது .இவர்களின் மரியாதை கலந்த பேச்சுதான் மற்ற ஊர் மக்களை விட , இவர்களை சிறப்புற காட்டுகிறது , அதிலும் குறிப்பாக பேருந்துப்பயணத்தில் ,
பேருந்தின் இருக்கையில் முன் பகுதியை பெண்களுக்கான இருக்கையாக இருப்பதும் ,அதை சாமானியர்களும் கடைபிடிப்பதும் கோவையில் நான் கண்டு வியந்தவைகளில் ஒன்று.கோவையின் தட்ப வெப்ப நிலை , இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ,எல்லாவற்றிருக்கும் மேலாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரையாக இருந்தாலும் , புதுக்கவிதை வளர்சியல் கோவையையும், கோவையின் வாணம்பாடி கவிஞர்களையும் மறந்துவிடமுடியுமா என்ன …! இந்தனை சிறப்புகளையும் நான் உணர்ந்தால் தான் இன்று நானொரு கோவை வாசியாகவே மாறிவிட்டேன். கோவையின் தேவைகள் என்பது போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதும், சுகாதாரமும் அடிப்படைத் தேவையாக கருதுகிறேன்.
காயத்திரி மந்திரா – சட்டக் கல்லூரி மாணவி / பாடகி
என்னை பொருத்த வரையில் கோவை தான் அருமையான ஊர். ஊட்டி குளிர் காத்து எப்போதும் தாங்கி கொள்ளும் அளவிற்கு மிதமான வெயில் என இந்த ஊரின் தட்பவெப்ப நிலையே தனி தான். எல்லா இயற்கை வளமும் உள்ள நகரம். எந்த ஊருக்கு போனாலும் கோயமுத்தூர்காரங்கனு சொன்ன போது தனி மரியாதை கிடைக்கும். அந்த அளவிற்கு மரியாதை கொடுக்கும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். ரோட்டோர சாப்பாடு கூட வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும். எல்லாவற்றிக்கும் மேல் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் கோவை முதல் தான் முதலிடம். பெண்களை மரியாதையாக நடத்தும் ஆண்கள் இங்கு ஏராளம். எனினும் சுத்தம் தான் கோவையின் அழகே அதை எப்போதும் போல் இருந்தால் அதுவே சிறப்பாக இருக்கும்.
ராகுல் – சமூக ஆர்வலர்
கோவையில் மலைகளை சுற்றிய இயற்கை சுற்றுலா தளங்கள் நிறைய உள்ளன. நிறைய சிறப்பு வாய்ந்த கோவில்கள், அமைதியாக தியானம் செய்யக்கூடிய இடங்கள், நிறைய கல்லூரிகள் இங்கு இருப்பதால் கல்விக்கு கோவை சிறந்து விளங்குகிறது. இதில் முக்கியான விஷயமே இங்கு சமூக ஆர்வளர்கள் அதிகமாக உள்ளதே. எனினும், வேலைவாய்ப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும்.சென்னைக்கு அடுத்து கோவையில் தான் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு போக்குவரத்து நேரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை குறைத்தால் நன்றாக இருக்கும்.
ஸ்ரீ தேவி – கல்லூரி மாணவி
நூற்றாண்டுகளை கடந்த கோவில், மசூதி, சர்ச் கோவைக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. தமிழ் சினிமாவிற்கு பல கலைஞர்களை தந்த ஊர். உதவி என்றால் முதல் ஆளாக இருக்கும் நகரம் கோவை தான். அது சென்னை மழை வெள்ளத்தின் போது கண்டிருப்போம். ஒற்றுமைக்கு இந்நகரம் ஒரு உதாரணம். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு தேவையான பொருட்கள் இங்கு தான் உற்பத்தியாகின்றன. விரைவில் ஸ்மார்ட் சிட்டி ஆகா போகிறது. எனினும் குளங்களை பாதுகாத்து இந்நகரம் மேலும் வளர்ச்சியடைய மெட்ரோ ரயில் சேவை இருந்தால் கோவை சிறப்பாக இருக்கும்.