November 24, 2017 தண்டோரா குழு
கோவை தேவராயபுரம் அருகே ஊர்மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் தேவராயபுரம் அருகேயுள்ள வெள்ளருக்கம்பாளையத்தில் சாலை விளக்குகள் எரியாததால் தான் யானை தாக்கி வாலிபர் இறந்ததாக் கூறி ஊர்மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேவராயபுரம் அருகேயுள்ள வெள்ளருக்கம்பாளையத்தில் நேற்றிரவு இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற சக்திவேல் என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலையிலுள்ள மின் விளக்குகள் எரியாததால் தான் சக்திவேல் இறந்துள்ளதாக தெரிவித்தனர். தேவராயபுரம் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் இருட்டில் நடந்து வரும் சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தவர்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.
மேலும்,யானைகள் ஊருக்குள் வருவது தெரியவில்லை எனவே பாதுகாப்புப்கேட்டு பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர்பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மக்களின் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.