June 29, 2016
தண்டோரா குழு
உதய்பூரில் பழங்குடியைச் சேர்ந்த பெண்ணையும், அவரது காதலரையும் நிர்வாணமாக்கி வீதியில் உலாவர வைத்த அவர்களது உறவினர்கள் மற்றும் கணவர் உட்பட 13 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள கசொடிய கிராமத்தைதில் வசித்து வந்த பழங்குடியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவர் தனது கணவனை விடுத்து 24 வயது காதலனோடு வாழ்க்கை நடத்தத் தீர்மானித்து ஜூன் 17ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையறிந்த ஊர் மக்கள் தங்களது சமூகத்திற்கு இழுக்கு இழைத்து விட்டார்களென்றும், கட்டுப்பாட்டை மீறிவிட்டார்களென்றும் குற்றஞ்சாட்டி, அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து ஊரின் நடுவே மரத்தில் கட்டிவைத்து, நிர்வாணமாக்கி இரண்டு நாட்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இருவரையும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஜுன் 20ம் தேதி நடைபெற்றிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இவர்களது நிலையை அண்டைஅயலார் சிலர் படம் பிடித்து அனுப்பியதன் பிறகே காவல்துறை சம்பவம் அறிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கணவரான பன்வர்லல் மீனா மற்றும் கிராமமக்கள் 12 பேர் மீதும் செக்ஷன் 365, 384, 354 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து கிராமத்தில் பதட்ட நிலையைச் சமாளிக்க அதிகப்படியான போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டதோடு, கிராம பஞ்சாயத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.