November 28, 2017 தண்டோரா குழு
உ.பி யில் விலையுயர்ந்த செடிகளை சேதப்படுத்திய காரணத்திற்காக 8 கழுதைகள் நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேஷ் மாநிலத்தின் ஜலான் மாவட்டத்திலுள்ள உராய் சிறைச்சாலைக்கு வெளியே, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செடிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் உலாவிக்கொண்டிருந்த 8 கழுதைகள் அந்த விலையுயர்ந்த செடிகளை தின்று சேதப்படுத்தியுள்ளது. இதைக்கண்ட உத்தரப்பிரதேஷ் காவல்துறையினர், அந்த 8 கழுதைகளை நவம்பர் 24ம் தேதி முதல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்று யாரோ ஒருவர் மூலம் தகவல் அறிந்த, அந்த கழுதைகளின் உரிமையாளர் கமலேஷ், உடனே காவல்நிலையத்திற்கு சென்று, தனது கழுதைகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவருடைய கோரிக்கையை நிராகரித்து, கழுதைகளை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் அவர் உள்ளூர் பா.ஜ.க கட்சி அமைச்சர் உதவியை நாடியுள்ளார். அந்த அமைச்சரும் கமலேசுடன் காவல் நிலையத்திற்கு சென்று கழுதைகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தியதை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் அந்த கழுதைகளை விடுவித்துள்ளனர்.