June 29, 2016
தண்டோரா குழு
இந்தியாவில் உள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி நமக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் பாரம்பரிய உயிரினங்கள் படிப்படியாய் அழிந்து வருகின்றது.
அந்த வகையில் இந்தியாவின் வட கிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் வாழும் அரிதான பல்லினத்துக்கும் இந்தக் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பல்லி இனம் சுமார் 20 இலட்ச ரூபாய் வரை விலை போகிறது.
அம்மாநிலத்திலுள்ள பரந்த மலைக்காடுகளில், பாரம்பரிய விருட்சங்களில் குடும்பம் குடும்பமாய் தங்கியிருந்து பல்கிப் பெருகி வாழும் டொகாய் ஜீகோ என்ற பெயருடைய அந்தப் பல்லிகளை வேட்டையாடும் வேலையில் அங்குள்ள பலரும் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.
நம் நாட்டு உடும்புகளை ஒத்த சுமார் ஒன்றரையடி நீளத்தில் அரைக்கிலோ வரை எடையுள்ள இப்பல்லிகள் உடும்புகள் போல் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இல்லாமல், நீலம் மற்றும் சாம்பல் நிற உடலில் மஞ்சள் நிறப் புள்ளிகளோடு பார்க்க மிக அழகாக இருக்கும்.
மேலும், அந்தப் பல்லியை அரைத்து மருந்தாக்கிச் சாப்பிட்டால் ஆண்மையில்லாதவர்களுக்கு வீரியமுண்டாகி குழந்தைகள் பிறக்கும். முற்றிய புற்றுநோயை குணமாகும் வல்லமை உடையது என்ற கருத்து நிலவிவருகிறது. மேலும் கொடிய எயிட்ஸ் நோய்க்கும் நிவாரணம் தரும் ஒரே மருந்து இது தான் என்று தினம் தினம் வெளியாகும் தகவல்கள் தான் இவற்றுக்கு எமனாகிவிட்டது.
அதில் அறிவியல் ரீதியாக எந்த உண்மையும் இல்லையென மருத்துவர்கள் அறிவித்தாலும் கூட, ஆசிய நாடுகளில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை பரவிய இந்தத் தகவல்களால் இது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.
மேலும், அந்தப் பல்லியானது குட்டியாக, ஓர் அடிக்கும் கொஞ்சம் கூடுதல் நீளமுடையதாயிருந்து சுமார் 200 கிராம் எடையிருந்தாலும் போதும் அதற்கும் விலை 20 இலட்சம் ரூபாய் என்று விலை பேசப்படுகிறது.
ஐந்து பல்லிகள் வரை தேடிப்பிடித்தால் கோடீஸ்வரராகி விடலாமென்று பேராசையோடு பலரும் மணிப்பூர் மலைக்காடுகளில் அலைந்து திரிகின்றனர். இவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த கடத்தல்காரர்களும் அடங்குவார்கள். கடந்த ஆறு மாதங்களில் சுமார் 70 பல்லிகளை அவர்களிடம் இருந்து வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், அந்த அடர்ந்த காடுகளில் எவ்வளவு முயன்று தேடினாலும் பலருக்கும் குட்டிப் பல்லிகள்தான் கிடைக்கின்றன. இப்படிக் கிடைத்தாலும் அதை விடுவதில்லை. மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி விவசாயிகளிடம் இவற்றை ஒப்படைத்து, அவற்றை வளர்த்துத் தருமாறு கேட்கின்றனர் அந்தப் பேராசை பிடித்த வேட்டைக்காரர்கள்.
அந்த மலைக்காட்டுச் சூழலில் வளரும் பல்லிகள் தான் ஆரோக்கியமாய், புஷ்டியாய் இருக்கின்றனவாம். குறிப்பிட்ட எடையளவு வளர்ந்தவுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர். இப்படிப் பல்லி வளர்ப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் கூலி கிடைக்கிறது. இதனால் பலர் விவசாயத்தைக் கைவிட்டு பல்லி வளர்ப்பில் இறங்கியுள்ளனர்.
இந்த ரீதியில் போனால் தேசிய உயிரினங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தப் பல்லியினமே அழிந்து போய்விடுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இதனையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.