November 29, 2017 தண்டோரா குழு
சுதந்திரமாக இருப்பதாகத் தெரியவில்லை என கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்ட ஹதியா சேலத்தில் பேட்டியளித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த அகிலா என்ற பெண் இந்து மதத்தில் இருந்து மாறி, ஹதியா என்று பெயரை மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய இளைஞரான ஷபின்ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் தனது மகளை மூளை சலவை செய்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாக ஹதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் அவர்களது திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைஎதிர்த்து ஹதியாவின் கணவர் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த பெண்ணின் விருப்பத்தின் படியே திருமணம் நடைபெற்றதா? என்பதை அறிய அவரை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து ஹதியா இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பை தொடர உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் ஹாதியாவை கேரள போலீஸார் நேற்று(செவ்வாய்க்கிழமை) சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று (நவ 29) செய்தியாளர்களைச் சந்தித்த ஹாதியா,
” மற்ற மாணவிகளுடன் சேராமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போது தான் கல்லூரிக்கு வந்தேன்.நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று கேட்டேன். ஆனால் இங்கேயும் நான் சுதந்திரமாக இருப்பதாகத் தெரியவில்லை. என் கணவரைத் தொடர்புகொள்ள ஆசைப்பட்டேன்.
இதுவரை பேச முடியவில்லை.
என்னுடைய பெற்றோருடன் நான் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். ஆனால் அவர்கள் என்னைத் தொலைக்காட்சியைப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. எனக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவித்தார்கள், வழக்கில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை.உச்ச நீதிமன்றத்தில் நான் குழப்பத்துடன் இருப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.ஆனால் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.நீதிமன்ற உத்தரவு இன்னும் கல்லூரிக்கு வரவில்லை. அதற்காக 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்” என ஹாதியா கூறியுள்ளார்.