November 30, 2017 தண்டோரா குழு
கோவையில் தள்ளாடும் காலத்திலும் வயதை பொருட்படுத்தாமல் தண்டோரா மூலம் மேற்கொள்ளப்படும் 70வயது முதியவரின் நூதன முறையிலான பிரசாரம் கவனத்தை பெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோயில்பாளையத்தை சேர்ந்தவர் கோயாஸ் சுப்ரமணியம்(70).இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இணைந்து தண்டோரா மூலம் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கழுத்தில் கட்சி துண்டு, நடப்பதற்கு உதவும் கம்பில் கட்சிக்கொடி, உதட்டில் கட்சி கொள்கைகள் அடங்கிய பாடல்கள் என தோற்றமும், தள்ளாடும் வயதிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அவரின் செயல்களே கட்சி மீது வைத்துள்ள விசுவாசத்திற்கும், உழைப்பிற்குமான சாட்சி.காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், ஜெயலலிதா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“வயதால் ஏற்படும் வலிகள் தன்னுடைய பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் உற்சாகத்தை தனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.மேலும் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை என அதிமுகவின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் பறை அடித்து கொள்கைகளை பாடலாக பாடி பிரசாரம் செய்வேன். எனது உணவு மற்றும் உடை சுற்றுப்பயணம் என சொந்த செலவுகளை நானே கவனித்துக் கொள்வேன்.
கோவை நகரின் சாலைகள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசாரம் செய்வேன்.கோவையில் வருகிற டிசம்பர் 3ம் தேதி நடக்கவிருக்கின்ற எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன்.மேலும்,ஆர்.கே நகரிலும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்துள்ளார்”. இவ்வாறு அவர் கூறினார்.