June 30, 2016
தண்டோரா குழு
இந்தச் செய்தி காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை மனைவியிடம் செல் போனைப் பயன்படுத்துவதாக திட்டுவாங்கி மனம் வெறுத்து உள்ள அனைத்து கணவன்மார்களுக்கும் சமர்ப்பணம். (ஐயா சாமி நானெல்லாம் அப்படித் திட்டு வாங்கினது இல்ல சாமி. என்ன அப்படி பார்க்காதீங்க.
அப்படீன்னு சொல்லிட்டு அடிவாங்கும் கணவர்களும் இதைத் தாராளமா முயற்சி பண்ணலாம். என்ன நான் சொல்றது….. அது……….) திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறையாகும். அத்துடன், திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு விசேஷ உறவில் இணைக்கும் ஒரு பந்தமாகும்.
இரு வெவ்வேறு குடும்பங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு பந்தமும் கூட. திருமணங்களில் மதம், பண்பாடு, போன்ற விஷயங்களில் வெவ்வேறு விதமான நெறிமுறைகளைப் பின்பற்றப்படுகின்றன.
எனினும், நடைமுறையிலுள்ள நெறிமுறைகளுக்கு அப்பால் சென்ற அமெரிக்க பிரஜை ஒருவர் விசித்திரமான திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இன்றைய நவீன காலத்தில் மனிதனின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள ஸ்மார்ட்போனை இவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் லாஸ்வேகஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. ஏரோன் சேர்வேனக் என்ற இளைஞர் தனது ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏரோன் சேர்வேனக், இன்றைய கால கட்டத்தில் மக்கள் அவர்களின் ஸ்மார்ட் போன்களை அதிகமாக நேசிக்கின்றனர். காலை முதல் இரவு தூங்கும் வரையிலும் மக்கள் ஸ்மார்ட்போனுடனேயே இருக்கின்றனர். மேலும், மக்கள் ஸ்மார்ட் போனுடன் உணர்ச்சிகரமான உறவைக் கொண்டு உள்ளனர். அது போலவே, தானும் என்னுடைய ஸ்மார்ட்போனுடன் நீண்ட நாள் உறவு உள்ளதாக நினைக்கிறேன். அந்த உறவு எனக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் இருக்கிறது. அது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றே இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.