December 7, 2017 தண்டோரா குழு
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சந்தானம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றும் ‘சக்க போடு போடு ராஜா’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் தனுஷ்,
இந்த ஆடியோ ரிலீஸுக்கு சிம்பு என்னை அழைத்தால் தான் வந்தேன். என்னோட பட விழாவுக்கு நான் அவரை அழைத்தாலும், நிச்சயம் அவரும் வருவார். சிம்புவும் நானும் நல்ல நட்புடன் உள்ளோம். மற்றவர்கள் சொல்வதுபோல் எங்களுக்குள் எந்த பிரச்னையுமே இல்லை. ஆனால், எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என நான் நினைக்கிறேன்.பல வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் என எங்கள் இருவருக்குமே இருந்து கொண்டு தான் இருக்கிறது.
15 ஆண்டுகள் ஆனாலும் சிம்பு நின்று கொண்டு தான் இருக்கிறார்.’துள்ளுவதோ இளமை’ ஷூட்டிங் டைமில் எனக்கு சுத்தமா நடனமாடவே வராது. அப்போது, சிம்பு மாதிரி ஆடுங்கள் என்று என்னிடம் சொல்லுவார்கள். இப்போதும் சொல்கிறேன், சிம்பு மாதிரி என்னால் நடனமாட முடியாது. என்னுடைய ரசிகர்கள் சிம்பு நடிச்ச படத்தை பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்கள் நான் நடிச்ச படத்தை பார்க்க வேண்டும். எல்லா ரசிகர்களும் எல்லாருடைய படத்தையுமே பார்க்க வேண்டும். ஏன்னா அப்போது தான் தேய்ந்து கொண்டிருக்கும் நமது சினிமாத்துறை புத்துணர்ச்சி பெறும் என்றார்.
மேலும், சிம்பு உங்களுடைய தீவிர ரசிகர்களுக்காகவாவது நீங்கள் ஒரு ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும். அது உங்களின் கடமையும் கூட. உங்கள் ரசிகர்களின் சார்பில் நான் இதை கேட்டுக்கொள்கிறேன்” என்று தனுஷ் கூறினார்.